சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, 2023 உலகக் கோப்பை போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருந்தது. ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பற்ற ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், கிரிக்கெட் களத்திற்கு வெளியே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அகமதாபாத் சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வீடில்லாத மக்களுக்கு அவர் அமைதியாக பணத்தை விநியோகிக்கும் காட்சியை வீடியோவில் காண முடிகிறது.
காரில் புறப்படுவதற்கு முன், தெருக்களில் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு அருகில் சென்று அமைதியாக பணத்தை வைத்துவிட்டுச் செல்கிறார்.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றிகள் பல மறக்கமுடியாதவையாக உள்ளன. குறிப்பாக, நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கன் அணி பெற்ற இந்த வெற்றிகளைப்போல ஆப்கன் வீரர் குர்பாஸின் இந்தச் செயலும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
குர்பாஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். ஒன்பது போட்டிகளில் ஆடிய அவர் 31.11 என்ற சராசரியுடன் 98.93 ஸ்ட்ரைக் ரேட்டில் 280 ரன்கள் எடுத்திருக்கிறார்.