vijaya mallaiya may be deportation

இரண்டாவது முறையாக கைதாகி விடுதலையான விஜய் மல்லையா, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில் அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாத விவகாரத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் வழக்கு பதிவு செய்தன.

அவரை இந்தியாவிற்கு அனுப்புமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் விஜய் மல்லையா 2வது முறையாக கைது செய்யப்பட்டார்.

வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மல்லையா, தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாக தெரிவித்தார்.

வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்று எனவும் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியதையடுத்து நீதிமன்றம் அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.