பள்ளி முதல்வரின் சகோதரர், பள்ளி கழிப்பறையில் ரகசிய கேமராவை பொருத்தி, மாணவிகளை படம்பிடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் எவெரெஸ்ட் இங்க்லீஸ் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளின் கழிப்பறையில் பள்ளி முதல்வர் தம்பி, ரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, மாணவிகளை வீடியோ எடுத்துள்ளான். கழிப்பறையில் மாணவிகள் செய்த நடவடிக்கைகள் இடம்பெற்று இருந்த வீடியோக்களை லேப்டாப்பில் அவன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததை, 2 ஆசிரியர்கள் கண்டுள்ளனர். மறைந்திருந்து லேப்டாப்பில் ஓடிய வீடியோக்களை பார்த்த அந்த ஆசிரியர்கள், அது எந்த கழிப்பறை என்று கண்டறிந்து, அந்த ரகசிய கேமராக்களை எடுத்தனர். கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்து, அதில் இருந்த வீடியோக்களை தங்களது செல்போனில் பதிவிறக்கம் கொண்ட அவர்கள், பின்னர், சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோக்களை பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆசிரியர்களின் செயலை அறிந்த பள்ளியின் பெண் முதல்வர், இருவரையும் அழைத்து கண்டித்து, செல்போனில் இருந்த வீடியோக்களை அழிக்கச் செய்துவிட்டு, இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் இருவரும், தாங்கள் ஏற்கெனவே, லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த வீடியோக்களை மீண்டும் சமூகவலைதளங்களில் பதிவேற்றினர். இரண்டாவது முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோவை பார்த்த மாணவிகளின் பெற்றோர் பலர் கொதித்துப் போய் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி பெண் முதல்வர் மற்றும் மாணவிகளின் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிய ஆசிரியர்கள் ஆகியோரை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில் 6 மாதங்களுக்கு முன்பே, மாணவிகளின் கழிப்பறையில் பள்ளி முதல்வரின் சகோதரர் ரகசிய கேமரா பொருத்தியதையும், அதில் பதிவான வீடியோக்களை அவன் அடிக்கடி பார்த்து ரசித்ததையும் கண்டறிந்தனர். இதையடுத்து, பள்ளி பெண் முதல்வர், அவரது சகோதரர், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிய ஆசிரியர்கள் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனியார் பள்ளியின் பெண் முதல்வர், சமூகவலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோ போலியாக இருக்கலாம் என்றும், ரகசிய கேமராவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.