இதுதொடர்பாக இந்திய ராணுவத்துக்கு கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தானுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவி அமைதியை சீர்குலைப்பதற்காக பயங்கரவாத முகாம்களில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 400 முதல் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படையினர் வான்வழித் தாக்குதல் மூலம் அழித்தனர். 

தற்போது, காஷ்மீரில் ஊடுருவுவதற்காகக் காத்திருக்கும் 500 பயங்கரவாதிகளுள் சிலர் இதே பாலாகோட் பகுதியில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. 

எனவே, இந்தத் திட்டத்தின் மூலம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால்தான், அங்கு அமைதியின்மை நிலவுகிறது என்கிற பிம்பத்தை சர்வதேச அமைப்புகள் முன் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாக இருக்கும் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே  இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், "பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அனால் அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றால் யாரும் உயிருடன் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.