எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தொடர்வது கஷ்டம்: ஆம் ஆத்மி!
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தொடர்வது கடினம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது
பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் பல முரண்பாடுகள் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால், ராகவ் சத்தா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும், கூட்டத்துக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தொடர்வது கடினம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து ஆட்சியைக் கட்டுப்படுத்த டெல்லியில் பிரகடனப்படுத்தப்பட்ட மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாகக் கண்டிக்காத வரை காங்கிரசை உள்ளடக்கிய கூட்டணியில் தொடர்வது கடினம்.” என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற 15 எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“காங்கிரஸின் தயக்கம் மற்றும் அணியாக செயல்பட மறுப்பது; குறிப்பாக, இது போன்ற முக்கியமான பிரச்சினையில், காங்கிரஸை உள்ளடக்கிய எந்தவொரு கூட்டணியிலும் ஆம் ஆத்மி ஒரு பகுதியாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கறுப்புச் சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாகக் கண்டித்து, அதன் 31 மாநிலங்களவை எம்பிக்களும் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்கும் வரை, காங்கிரஸ் பங்கேற்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் எதிர்காலக் கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பது கடினம்.” என ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மவுனம் அதன் உண்மையான நோக்கங்கள் பற்றிய சந்தேகத்தை எழுப்புவதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
“தனிப்பட்ட விவாதங்களின்போது, டெல்லி அவசர சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, தங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையில் வாக்களிப்பதில் இருந்து காங்கிரஸின் புறக்கணிப்பு, இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்க பாஜகவுக்கு உதவும். இன்று, பாட்னாவில் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிக் கூட்டத்தின் போது, பல கட்சிகள் கறுப்புச் சட்டத்தை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு காங்கிரஸை வலியுறுத்தின. ஆனால், காங்கிரஸ் அதற்கு மறுத்து விட்டது.” எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
“பாட்னாவில் நடைபெற்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் கூட்டத்தில் மொத்தம் 15 கட்சிகள் கலந்து கொண்டன. அவற்றில் 12 கட்சிகள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. காங்கிரஸைத் தவிர, மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் பெற்ற மற்ற 11 கட்சிகளும், டெல்லி அவரசச் சட்டத்திற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, ராஜ்யசபாவில் எதிர்ப்பதாக அறிவித்துள்ளன.” என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது.
பாஜகவின் தனி பெரும்பான்மை காரணமாக மக்களவையில் இந்த மசோதா எளிதில் நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் சிக்கல் எழும் நிலை உள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து மசோதவை எதிர்க்குமாறு கோரிக்கை விடுத்து, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டுள்ளார். ஆனால், இந்த மசோதா மீதான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க இந்த மசோதா அடித்தளம் இடும் என்பதால் காங்கிரஸின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.