பெங்களூருவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டத்தைத் தூண்டும் விதமாக பேசிய கன்னட அமைப்பினர் வீடியோ ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர வேண்டும் என்றும், தமிழர்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்று பெங்களூரு 42-வது கவுன்சிலர் வேலுநாயக்கர் என்பவர் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
கர்நாடகாவில் உள்ள மாண்டியா, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறை குறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு 42-வது வார்டு கவுன்சிலர் வேலுநாயக்கர், பெங்களூரு தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். காவிரி போராட்டம் என்று வந்தால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கன்னட அமைப்பினரே காரணம் என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் வசிக்கும் பல லட்சம் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுங்கள் என்று ஒருபோதும் கூறியது இல்லை. ஆனால், காவிரி போராட்டம் என்று வந்தால், இங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் தமிழ் சேனல்களை ரத்து செய்வோம் என்றும் தியேட்டர்களில் தமிழ் படங்களை திரையிட மாட்டோம் என்றும், தமிழர்களை விரட்டி அடிப்போம் என்று பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் பேசுவது நமது உரிமையை பறிப்பதாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வேலுநாயக்கர் கூறினார்.

அவ்வாறு போராட்டத்தைத் தூண்டும் விதமாக பேசிய கன்னட அமைப்பினர் வீடியோ ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர வேண்டும் என்றும், தமிழர்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்றும் வேலுநாயக்கர் கூறினார்.
