மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், 2009-ம் ஆண்டு திமுக. அரசால் தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்ற வைகோ தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரது மனுவை ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கு பாஜகவினர் எச்.ராஜா மற்றும் தமிழிசை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாஜகவை போல அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதனிடையே, மாநிலங்களவை தலைவரான துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்க அனுமதிக்க கூடாது. மேலும், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ பேசி வருகிறார் என்று தெரிவித்துள்ளார். ஆகையால், தேசதுரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.