Asianet News TamilAsianet News Tamil

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி..மார்ச் இறுதியில் தொடக்கம்..? மத்திய அரசு தகவல்

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Vaccine for children 12 to 14 years of age
Author
India, First Published Jan 17, 2022, 7:55 PM IST

நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக முன்களபணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. பின்னர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மெல்ல மெல்ல 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் என்று விரிவுப்படுத்தப்பட்டது.

தற்போது ஓராண்டின் நிறைவில், சுமார் 156.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள 92 சதவீத பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருப்பார்கள். 68 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடைசியாக, 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 - 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாட்டில் இதுவரை 3.38 கோடி தடுப்பூசிகள் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், உலகிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற தடுப்பூசி திட்டம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மிகவும் வளர்ந்த நாடுகளில் கூட மிகக் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமது நாட்டில் பெரிய அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி எட்டப்பட்டது. கடந்த 7ஆம் தேதி இது 150 கோடியைத் தொட்டது. பலமுறை ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் ஒரேநாளில் செலுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 66 லட்சம் தடுப்பூசிகள் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, இது 156.76 கோடியை தொட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தற்போது பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டது. அதன்கீழ் 43.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, '12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும். இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்,' என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios