லக்னோ, நவ. 24-
வங்கிகளில் பணம் பெறுவதற்காக வரிசையில் நிற்கும் மக்களிடம் கனிவுடன், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் என்று, மாவட்ட கலெக்டருக்கும், போலீசாருக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆணையிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பதேபூர் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் பணம் எடுக்க மக்கள் காத்திருந்தனர். அப்போது, வங்கி திறக்கப்பட்டவுடன் கூட்டமாக மக்கள் வங்கிக்குள் உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக ஓட, ஓட விரட்டி தாக்கி, வரிசையில் நிற்க வைத்தனர். இந்த காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பும், சர்ச்சைக்கும் உள்ளானது.
இதையடுத்து, மக்கள் மீது காட்டுமிராண்டித்தனத் தாக்குதல் நடத்தி இரு போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய்குமார் யாதவ், மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராம் கிஷோர் ஆகியேரை இடைநீக்கம் செய்து முதல்வர் அகிலேஷ்உத்தரவிட்டார்.
இந்நிலையில், வங்கியில் பணம் பெற வரிசையில் நிற்கும் மக்களிடம் கனிவுடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அகிலேஷ் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின், மக்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நேரத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.
வங்கியின் பணம் பெற வரிசையில் நிற்கும் மக்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்கள் மீதும் கருணையுடன், கனிவுடன் போலீசாரும், அதிகாரிகளும் நடந்து கொள்ள, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரென்டுகள் உத்தரவிட வேண்டும். மக்கள் மீது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
தற்போது ராபி பருவம் நடந்து வருவதால், அனைத்து விவசாயிகளுக்கும் விதை கொள்முதல், உரம், பூச்சிமருந்து, ஆகிய வேளாண்மைக்கு உகந்த பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசாரின் பணி என்பது மக்களுக்கு உதவுவதுதான். ரூபாய் நோட்டு தடையால் ஏற்கனவே கடும் மனஉளைச்சலில்இருக்கும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவது சரியாகாது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
