Uttar Pradesh govt paints the town saffron Buses to school bags booklets to furniture

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சிக்கு ஆட்சிக்கு வந்தபின் அரசு பஸ் முதல் அலுவலக நாற்காலி வரை அனைத்திலும் ‘காவி நிற’ பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் பா.ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல்வராக கோரக்பூர் தொகுதி எம்.பி.யும், கோரக்பூர் மடத்தின் அர்ச்சகராக இருந்த யோகி ஆதித்தியாத் பொறுப்பேற்றார்.

முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றபின், சத்தமில்லாமல் மாநிலத்தின் அரசு நிர்வாக ரீதியான அனைத்து விஷயங்களும் காவி மயமாக மாற்றப்பட்டு வருகின்றன. 

லக்னோவில் நேற்று முன் தினம் முதல்வர் ஆதித்யநாத் ‘சங்கல்ப் சேவா’ என்ற பெயரில் கிராமங்களுக்கு 50 புதிய பஸ்களை அறிமுகம் செய்தார். அனைத்து பஸ்களும் காவி நிறத்தில்பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி நடத்த அமைக்கப்பட்டு இருந்த மேடையும்காவி நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “ கான்பூர் பணிமனையில்தான் இந்தபஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் மட்டுமல்லாது அடுத்துவரும் பஸ்களும்காவி நிறத்திலேயே வரும்’’ எனத் தெரிவித்தனர். 

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் வழங்கப்பட்ட ஸ்கூல் பேக் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக காவிநிறம் பூசப்பட்ட ஸ்கூல் பேக்குகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி மாநிலத்தில் விளையாட்டில் சிறந்தவர்களுக்கான ‘லட்சுமண் மற்றும் ராணி லட்சுமி பாய்’ விருதுகள் வழங்கப்பட்டது. அதில் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழின் பின்பக்கம், மற்றும் ‘வாட்டர்மார்க்’ காவி நிறத்திலேயே இருந்தது. 

மேலும், பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழும், காவி நிறத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. 

முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த பின்பும், 6 மாதங்கள் முடிந்த பின்பும் தனது அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். அந்த இரு புத்தகங்களும் காவி நிறத்தில் இருந்தன. 

மாநிலத்தில் உள்ள தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமைச்சர்கள், அதிகாரிகளின் தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட பல விவரங்கள் அடங்கிய இந்த ஆண்டுக்கான டைரியை வெளியிட்டது. அந்த டைரி முழுவதும் காவி நிறத்தில் இருந்தது. மேலும், பிரதமர் மோடி, ப.ஜனதா சிந்தனையாளர் தீனதயால் உபாத்யாயா ஆகியோர் படங்கள் இடம் பெற்று இருந்தன. 

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வழப்பட்ட அடையாள அட்டை மாற்றப்பட்டு, தற்போது காவி நிறத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “ நாங்கள் அனைத்து வண்ணங்களையும் விரும்புகிறோம். ஆனால், காவி நிறம் எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. இது தியாகத்தையும், வீரத்தையும் எடுத்துரைக்கும். தேசியக் கொடியும் காவி நிறத்தில்தான் இருக்கிறது. காவி நிறம் என்பது எங்களின் தனிப்பட்ட தேர்வு. இதில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. 

காவி நிறம் அனைத்து இடங்களிலும் இருப்பது என்பது எதேச்சையான ஒரு விஷயம். இந்த அரசு மக்களுக்கானது; அனைத்து தரப்பினரும் பயன்பெறுகிறார்கள் ’’ என்று தெரிவித்தார்.