அரசுப் பள்ளியில் சக மாணவனால், தனது தம்பி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க, ஒட்டுமொத்த பள்ளி மாணவ, மாணவிகளையும் விஷம் வைத்து கொல்ல முயன்ற 7ஆம் வகுப்பு மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ளது பவுலியா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்த 8 வயது மாணவன், அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்த மாணவனால், கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், 5ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து, சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவனின் அக்காவும் அதே பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். தனது தம்பியை கொலை செய்த சகமாணவன் கைது செய்யப்பட்டாலும், ஆத்திரம் தீராத மாணவி, ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களையும் பழிதீர்க்க முடிவு செய்தார். அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய முடிவு செய்த மாணவி, இது குறித்து தாயிடம் உதவி கேட்டார். ஆனால், மாணவியின் ஆலோசனைக்கு தாய் மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனாலும், தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த மாணவி, ஊரார்கள் சிலரிடம் மனிதர்களை எவ்வாறு விஷம் மூலம் கொலை செய்வது என கேட்டறிந்தார்.அரளி விதையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள் என சிலர் கூறியதைக் கேட்டுக் கொண்ட சிறுமி, பள்ளியில் மதிய உணவிற்காக சமைத்த பருப்புக் குழம்பில் கலப்பதற்காக அரளி விதையை தயார் செய்தார். அதை பள்ளிக்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த அவர், மதியம் சுமார் 11 மணியளவில் சமையலறைக்குச் சென்று, பருப்புக் குழம்பில், தான் தயாராக வைத்திருந்த அரளிவிதை கரைசலை ஊற்றினார். பின்னர் அங்கிருந்து அவர் நைசாக வெளியேறுவதைப் பார்த்த சமையல்காரப் பெண், மாணவியை அழைத்து விசாரித்தார்.

மாணவி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த சமையல்காரப் பெண், சமையலறை உள்ளே சென்று பார்த்தபோது, பருப்புக் குழம்பின் மீது ஏதோ வெண்மை நிறத்தில் படர்ந்திருப்பதை கண்டார். இதையடுத்து, மாணவியின் கையையும் முகர்ந்து பார்த்து, அவர் கலந்தது அரளிவிதை என்பதை உறுதி செய்த சமையல்காரப் பெண், மாணவியை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். இதனிடையே, மாணவர்களுக்கான மதிய உணவில் மாணவி விஷம் கலந்த தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்ததால், ஏராளமான பெற்றோர் பள்ளி முன் திரண்டனர்.. இந்த தகவலை அறிந்து விஷம் கலந்த மாணவியின் தாயாரும் பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக பொதுமக்கள் தாக்கத் தொடங்கினார்.. இதனிடையே, சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர், மாணவியை கைது செய்து அழைத்துச் சென்றனர்