உத்தர பிரதேச முதலமைச்சரான அகிலேஷ் யாதவ், தனது தந்தையை எதிர்த்து, போட்டி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதால், அந்த கட்சியில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில், கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.

அகிலேஷ் யாதவுக்கும், அவரின் சித்தப்பாவான சிவ்பால் யாதவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்த நிலையில், அகிலேஷ் யாதவிடம் இருந்து சிலமாதங்களுக்கு முன்பு, கட்சியின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று முன்தினம், 325 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, கட்சித் தலைவர் முலாயம் சிங் அதிரடியாக வெளியிட்டார். இதில், முதலமைச்சர் அகிலேஷ் யாதவி பெயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த அகிலேஷ், தனது ஆதரவாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். 

அதன் பின்னர் தந்தை முலாயம் சிங்கையும், அவரது இல்லத்தில் சந்தித்து தனது அதிருப்தியை வெளியிட்டார். பின்னர் 235 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். இதன் காரணமாக சமாஜ்வாதி கட்சியில் உள்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, நேற்றிரவு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வீட்டிற்கு சென்ற அவரது சகோதரர் ஷிவ்பால் யாதவ், அவருடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை முலாயம் சிங் வெளியிட்டார். இதில் 78 பேர் இடம் பெற்றுள்ளனர். 

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான 403 வேட்பாளர்களையும் முலாயம் சிங் வெளியிட்ட நிலையில், உட்கட்சிப் பூசல் காரணமாக தேர்தல் வெற்றி பாதிக்கப்படுமா? என சமாஜ்வாதி கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். இதனால், அக்கட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.