உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் மோதல் வலுத்து வருகிறது. இதனால், சைக்கிள் சின்னம் யாருக்கு என்பதில் விரைவில் தெரியவரும் என தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே பெரிய மாநிலமாக திகழும் உத்தரபிரதேசத்தில், பிப்ரவரி 11ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை 7 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆனால் தற்போது, அந்த மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியில், குடும்ப சண்டை வலுத்துள்ளது. இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாக பிரிந்துவிட்டது.

தேசிய மாநாட்டில், முலாயம் சிங்கை நீக்கி விட்டு, அவரது மகன் அகிலேஷ் யாதவை தேசிய தலைவராக்கி உள்ளது. முலாயம் சிங்குக்கு ஆதரவாக அவரது தம்பி சிவபால் சிங்கும், அகிலேஷ் யாதவுக்கு பக்க பலமாக முலாயமின் மற்றொரு தம்பியான ராம்கோபால் யாதவும் உள்ளனர்.

இதைதொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், இருவரும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளனர். ஆனால், கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தை, இருவரும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த சமரச பேச்சு வார்த்தையில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், இவர்களின் மோதல் வலுத்து கொண்டே செல்கிறது.

மூத்த மந்திரியான ஆசம்கான், லக்னோவில் நேற்று முலாயம் சிங்கை சந்தித்து பேசினார். இருவரும் 1 மணிநேரம் பேசியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஆசம்கான், ‘‘முலாயம் சிங்குடன் பேசினேன். பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறார். தந்தையும், மகனும் சந்தித்து பேசியது நல்லது. பல பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட்டன. பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும் என நம்புகிறேன்’’ என குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை நேற்று அறிவித்தார்.

 

அப்போது, சமாஜ்வாடி கட்சியில் இரு தரப்பினரும் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கொண்டாடுவதற்கு, இதற்கு முன்பு நடந்துள்ள முன் உதாரணங்களையும், ஏற்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளையும் கவனத்தில் கொண்டும், எங்கள் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்தும் உரிய முடிவு, விரைவில் எடுக்கப்படும் என்றார்.