தமிழர்கள் உள்ளிட்ட தென் மாநிலத்தவர்கள் கருப்பர்கள் என்று நிறவெறியோடு பேசிய பா.ஜனதா தலைவர் தருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். 

சாதி மற்றும் நிறத்தின் அடிப்படையிலான பிரிவினையை நாட்டில் இல்லை என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

கருப்பர்கள்

தென் இந்தியர்கள் கருப்பர்கள் என்று பா.ஜனதா தலைவர் தருண் விஜய்சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் மன்னிப்பு கோரினார்.

எதிர்க்கட்சிகள் கோஷம்

மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தில் இந்த பிரச்சினையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.கள் எழுப்பியதால், அவையில் பெரும் கூச்சலும், சர்ச்சையும் நிலவியது. மோடி அரசு பதில் கூற வேண்டும், நிறவெறியுடன் பேசிய தருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நாங்கள் இந்தியர்கள் தானே?

கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “ நான் ஒன்றை இந்த அவையில் தெரிந்து கொள்ள வேண்டும். தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள் இல்லையா?. நிறவெறியுடன் பேசிய பா.ஜனதா தலைவர் தருண் விஜய்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. இவர் ஒன்றும் சாதரண நபர் அல்ல, முன்னாள் எம்.பி., பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்.

வழக்குப்பதிவு

அவருடைய பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த நாட்டை துண்டாடப் பார்க்கிறீர்களா?.  தருண் விஜயின் பேச்சு, பா.ஜனதாவின் மன நிலையைக் காட்டுகிறது. சர்வாதிகாரி ஹிட்லர் போல் பேசி இருக்கிறார். இதை கண்டிக்கிறோம். தேசவிரோத போலவும், நாட்டை துண்டாடுவது போலவும் பேசிய அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.

மன்னிப்பு கேட்டுவிட்டார்

அதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு சாதி, நிறம், மதம் அடிப்படையில் பிரிவினை இல்லை. இது தொடர்பாக அவர் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆதலால், இதற்க மேல் கேள்வி எழுப்ப வேண்டாம். அவர் பெயரையும் குறிப்பிட வேண்டாம்’’ என்றார்.

அமளி

உடனே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு, மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “ இந்த அவை நீதிமன்றம் அல்ல’’ என்று கூறி அவையை 20 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

காங். மீது குற்றச்சாட்டு

பின் 12.45 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத்துறை ஆனந்த் குமார் பேசுகையில், “தருண் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாம் இந்தியர்கள், இதில் நிறத்தின் அடிப்படையில் வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சிதான் பிரிவினையை உண்டாக்குகிறது. பிரிவினையை உண்டாக்க முயற்சிக்க வேண்டாம் கார்கே’’ என்று தெரிவித்தார்.

ஒத்திவைப்பு

மீண்டும் எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 1.50 வரை ஒத்திவைத்தார். முன்னதாக கேள்வி நேரத்தின் போது, 10 நிமிடங்கள்  அவரை ஒத்திவைக்கப்பட்டது.