இஸ்லாமிய பெண் ஒருவர் சப்பாத்தியை கருக்கியதால், திருமணமான ஒரே ஆண்டில் அவர் கணவர் உடனடி முத்தலாக் சொன்ன சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய சட்டப்படி, மனைவியுடனான திருமண உறவை முறித்துக் கொள்ள விரும்பும் கணவர், வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் மூன்று முறை தலாக் சொல்லி, விவாகரத்து செய்யலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் கோபத்தின் வெளிப்பாடாக ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி, மனைவியை விவகாரத்து செய்ததாகவும், நவீன தொழில்நுட்ப உலகில் போன், மெசேஜ், இ-மெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப், கடிதம் ஆகியவற்றின் மூலமும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதால், இஸ்லாமிய பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிறது என பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், இஸ்லாமிய பெண்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்கள் உடனடி முத்தலாக் கூறுவது சட்டப்படி குற்றம் என்றும், அதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, உடனடி முத்தலாக்கை தடை செய்ய சட்டம் இயற்றிய மத்திய அரசு, உடனடி முத்தலாக் சொன்னால், சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வகை செய்தது. ஆனாலும், இந்த சட்டத்தை சில இஸ்லாமிய நண்பர்கள் மதித்ததாக தெரியவில்லை. இத்தகைய சூழலில்தான், உத்தரப்பிரதேசத்தில் திருமணம் முடித்து ஒரே ஆண்டில், மனைவியை உடனடி முத்தலாக் கூறி விவாரத்து செய்துள்ளார் ஒருவர் இஸ்லாமியர்.மஹோபா மாவட்டம் பக்ரேதா கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், கடந்த ஆண்டு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதற்கேற்ப, திருமணம் முடித்த சில நாட்களிலேயே மனைவியை அவர் வெறுக்கத் தொடங்கினார். அப்பாவி மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்திய அந்த நபர், இளம்பெண்ணின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடும் வைத்தார். திருமணம் முடித்த சில மாதங்களிலேயே இந்த கொடுமையை அனுபவித்து வந்த பெண், தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியபோது, அவர்களும் கணவரை அனுசரித்து போகும்படி அறிவுரை கூறினர். பெற்றோரும் கைவிட்டுவிட்டதால், தலைவிதியை நொந்துகொண்ட அந்த பெண், வேறுவழியில்லாமல் கணவரின் கொடுமைகளை தாங்கிக் கொண்டார்.இந்நிலையில், கடந்த வாரம் சப்பாத்தி தயாரிக்குமாறு, அந்த பெண்ணிடம் கணவர் கூறினார். பெண்ணும் சப்பாத்தி தயாரித்தபோது, சிறிது கவனக்குறைவாக இருந்ததால், சப்பாத்தி லேசாக கருகியது. இதைப்பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர், சப்பாத்திக் கூட உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியாது என்று கேட்டதுடன், முத்தலாக் கூறி மனைவியை வீட்டை விட்டு விரட்டினார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு பலமுறை கெஞ்சி அழுதாலும், மனமிறங்காத அவர், மனைவியை வெளியே துரத்தி, வீட்டை பூட்டிவிட்டார். இதையடுத்து, காவல் நிலையம் விரைந்த அந்த பெண், முத்தலாக் கூறிய கணவர் மீது புகார் அளித்தார். இதையடுத்து, அந்த இஸ்லாமியர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.