சர்ச்சைப் பேச்சுக்கு சொந்தக்காரரான பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். பகவான் ராமனே வந்தாலும், பாலியல் வன்கொடுமையைத் தடுக்க முடியாது என்று எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான சுரேந்திர சிங் கூறும் கருத்துக்களால், சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தாஜ்மகாலை, ராம் மகால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்றும், அரசு ஊழியர்களைவிட விபச்சாரிகள் சிறந்தவர்கள் என்றும் என்று இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருகிறார்.

இவர் கூறும் கருத்துக்கு, எதிர் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், தன்னுடைய சர்ச்சை பேச்சை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து பேசும்போது, பகவான் ராமபிரானே வந்தாலும் இந்த பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எம்.எல்.ஏ. சுரேந்தர்சிங் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, பகவான் ராமபிரானே வந்தாலும் இந்த பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாது. இதனை நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். இந்த பாலியல் வன்கொடுமை என்பது இயற்கை சீரழிவு. ஒவ்வொரு பெண்களை நம்முடைய சகோதரிகளாக நினைக்க வேண்டும்.

இதனை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அரசியலமைப்பு சட்டத்தால் கட்டுப்படுத்த இயலாது. உளவியல் ரீதியான பார்வையில் பேசுகிறேன். 3 குழந்தைகளின் தாயாரை யாரும் பாலியல் வன்கொடுமை செய்ய மாட்டார்கள். இது சாத்தியமில்லை. உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் கைதான செங்காருக்கு எதிராக சதி நடக்கிறது. அவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்தை நான் மறுக்கிறேன் என்று எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் கூறியுள்ளார்.