UP Government Has Brought Uniformity in Power Supply Adityanath

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி ஒரேமாதிரியான மின்சாரம் வழங்கப்படும். கடந்த ஆட்சிபோல், குறிப்பிட்ட 5 கிராமங்களுக்கு மட்டும் வழங்கப்படாது என்று முதல்வர் ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல துணை மின்நிலையங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது-

இதற்கு முன்பு இருந்த சமாஜ்வாதி அரசு, குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டுமே மின்சார சப்ளையை தடையின்றி அளித்தது. மற்ற மாவட்டங்கள், கிராமங்கள் பெரிய அளவில் சிரமத்துக்கு உள்ளாகின. பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பதவி ஏற்றபின், மின்சார சப்ளையில் வி.ஐ.பி. கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 75 மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம் நடந்த அம்பேத்கரின் பிறந்த நாளின் போது, இதற்கான கொள்கையை நான் உருவாக்கினேன். அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் 24 மணிநேர தடையில்லா மின் வசதி, மலைப்பகுதி தலைநகரங்களுக்கு 20மணிநேரம், கிராமப்புறங்களுக்கு 18 மணிநேரம் மின்வசதி அளிக்கப்படும்.

மக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏதேனும் பழுது ஏற்பட்டு புகார் செய்தால், அந்த பழுது அடுத்த 24 மணிநேரத்துக்குள் சரி செய்யப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையில்லா மின்சாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.