உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 33.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு கிடைத்து இருப்பதால், இனி மாநில இளைஞர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ''உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீடு கிடைத்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் கிராமங்களில் இருக்கும் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும். மாநிலத்தின் ஒரு சிறு திறன் வாய்ப்பைத்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு காட்டியுள்ளது. முந்தைய அரசாங்கள் மாநிலத்தில் ஜாதி, குடும்ப அரசியல், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநிலத்தையே அடகு வைத்துவிட்டார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வளங்கள் குவிந்து கிடக்கிறது. 1947ஆம் ஆண்டில் மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தது. ஆனால், அதற்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் ஜாதி அரசியல், வன்முறை அரசியல், குடும்ப அரசியல் செய்து தேசிய சராசரி அளவில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்கு விட்டுச் சென்றுள்ளனர். முந்தைய ஆட்சியாளர்கள் மாநிலத்தையே அடமானம் வைத்து இருந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், தனி நபர் வருமானம் இரட்டிப்பாகி, மொத்த மாநில ஜிடிபியும் அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து முதலீடுகள் விரைவில் இந்தியா வரவிருக்கிறது. இதன் பின்னர் இளைஞர்கள் வேலை தேடி சீனாவுக்கு செல்ல வேண்டியதில்லை. டாடா குழுமத்துடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், பண்டல்கண்ட் பகுதிக்கு 4.29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து ஒரு பொருள் உற்பத்தித் திட்டம், சிறுகுறு தொழில் வளர்ச்சி என பெரிய அளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக மொராதாபாத் மாவட்டத்தில் இருந்து ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தற்போது ரூ. 15,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதுவே 2017ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் ரூ. 2,500 கோடியாக மட்டுமே இருந்தது. இதேபோன்று பர்தோஹி கார்பெட் முற்றிலும் அழிந்து இருந்தது. அதற்கு புத்துயிர் கொடுத்து, தற்போது ரூ. 6,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
வங்கிகள் மூலம் பிரதமர் முத்ரா யோஜனா மற்றும் சிஎம் யுவ ஸ்வரோஜ்கர் யோஜனா திட்டத்தின் மூலம் 60 லட்சம் தொழில் முனைவோரை இணைத்துள்ளோம். 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வேலை இல்லாமை 19 சதவீதமாக இருந்தது. அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
