உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர் 2017-ம் ஆண்டு பாங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் தன்னை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பான புகாரை ஏற்க மறுத்ததால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. இதன்பின் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, போலீஸ் காவலுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் தந்தை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. மேலும், வழக்கு விசாரணைக்காக ஜூலை மாதம் சிறுமியும், அவரது வழக்கறிஞரும் நீதிமன்றத்திற்கு சென்றபோது, அவர்கள் சென்ற வாகனம், எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு, படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உன்னாவ் விவகாரத்தை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்டு 1-ம் தேதி விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், நாடே எதிர்பார்த்த உன்னாவ் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் சர்மா தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குல்தீப் செங்காருக்கான தண்டனை விவரம் நாளை வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.