கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில், மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு. இந்த அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

ஆனால் கடந்த 21 நாட்கள் ஊரடங்கு போல அல்லாமல், சில தளர்வுகள் இம்முறை வழங்கப்பட்டுள்ளன. என்னென்ன தளர்வுகள் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. 

அவையாவன:

1. விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளலாம். விளைபொருட்கள் கொள்முதலுக்கு ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் அனுமதி.

2.  100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறலாம். ஆனால் சமூக விலகலை கடைபிடிப்பதுடன், அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழிற்பேட்டையில் செயல்படும் நிறுவங்கனங்கள் செயல்படலாம். பணியின் போது அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

4. ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிறு, குறு தொழில்கள் செய்யப்படலாம்.

5. எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக், மோட்டார் மெக்கானிக் ஆகியோர் 20ம் தேதிக்கு பின்னர் பணியை தொடங்கலாம்.

6. குழந்தைகள், முதியோர், ஆதரவற்றோர் காப்பகங்கள் செயல்படலாம்.

7. வங்கிகள், நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்படலாம் என்பன போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் எந்த வித மாற்றத்தையும், தளர்வுகளையும் மாநில அரசுகள் செய்யக்கூடாது. ஊரடங்கை அனைத்து மாநிலங்களும் எந்தவித சமரசமுமின்றி கடுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார். எனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மாநில அரசுகள், கூடுதலாக எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது.