இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து, முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 40 வயதுக்கு மேற்பட்டோர் என ஒவ்வொரு பிரிவாக போடப்பட்டுவருகிறது.

தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், கொரோனா பாதிப்பும் அதிகரித்துவருகிறது. இந்தியாவின் பாதிப்பில் 50% மகாராஷ்டிராவில் தான். மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக கூறியது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக கூறி, பழியை மத்திய அரசு மீது மடைமாற்றம் செய்ய நினைத்தது மகாராஷ்டிர மாநில அரசு.

மகாராஷ்டிர மாநில அரசின் குற்றச்சாட்டை கேட்டு அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா கடந்த ஓராண்டில் கற்றுக்கொடுத்த படிப்பினைகளிலிருந்து பாடம் கற்று 2ம் அலையை கட்டுப்படுத்த முடியாத மகாராஷ்டிர அரசு, இயலாமையால் பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதாக ஹர்ஷ்வர்தன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்ட மகாராஷ்டிர அரசு, மத்திய அரசின் மீது பழிபோடுகிறது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கடந்த ஓராண்டாக ஒரு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக, கொரோனாவுக்கு எதிரான போரில் மகாராஷ்டிர அரசு காட்டிய அலட்சியத்தையும், கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மகாராஷ்டிர அரசின் அலட்சியம், தேசியளவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பொறுப்புடன் செயல்பட முடியாத மகாராஷ்டிர அரசு, இயலாமையால் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. தடுப்பூசி விநியோகம் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கப்படுவதுடன், மாநில அரசுகளுக்கும் அப்டேட் தெரிவிக்கப்படுகிறது என்றார் ஹர்ஷ்வர்தன்.