கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதலே முக்கியமான ஒன்று. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் மும்பையில் ஒரு முதியவரும் பீஹாரில் 38 வயது இளைஞரும் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வந்தாலும், இந்தியாவில் இன்னும் பொதுச்சமூகத்தில் கொரோனா பரவவில்லை. எனவே பொதுச்சமூகத்தில் பரவுவதற்கு முன்பாக, அதை கட்டுப்படுத்தி, தடுத்து விரட்டுவது முக்கியம்.

அதனால் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் தனிமைப்படுதலின் முக்கியத்துவத்தையும் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதோடு, தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் விடுதியில் இருந்த மாணவ மாணவிகள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். ஆனால் வெளிநாட்டு மாணவ மாணவிகள் மற்றும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சிலர் விடுதிகளிலேயே தங்கியுள்ளனர். 

இந்நிலையில், அவர்களை விடுதிகளிலேயே தங்க அனுமதிக்குமாறும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அமித் கரே அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், வெளிநாட்டு மாணவர்கள் உட்பட விடுதிகளில் இன்னும் தங்கியிருக்கும் மாணவர்களை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் பொதுச்சமூகத்திற்கு பரவுவதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதற்கு மேல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. அந்தவகையில், இன்று ஒருநாள், இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் இன்று ஊரடங்கை பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.