இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தேசியளவில் மொத்தமாக 9000க்கும் அதிகமானோர் குணமடைந்திருந்தாலும், இன்னும் 25 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையிலும் தொடர்ச்சியாக பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னையில் இதுவரை 1082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டுவருகின்றன. எனினும் பாதிப்பு அதிகரித்துவருவதால் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் முதற்கட்ட ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடியவுள்ள நிலையில், தேசிய அளவில் இன்னும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. எனவே மே 3க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றிற்கான தடை தொடருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என்பதால் கட்டாயத்தின் பேரில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு.