அரசு பணிகளில் புதிய பதவிகளை உருவாக்கக்கூடாது என்றுதான் உத்தரவிடப்பட்டதே தவிர, புதிய பணியமர்த்தல்கள் செய்யப்படக்கூடாது என்று தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

விழாக்கள் நடத்துவது, அச்சிடுவதற்கு இறக்குமதி காகிதங்களை பயன்படுத்துவது போன்ற தேவையற்ற செலவுகளை குறைக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கு, நிதியமைச்சகம் நேற்று உத்தரவிட்டிருந்தது. 

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மத்திய அமைச்சகங்களும், துறைகளும், தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். மிகமுக்கியமான தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

முக்கியத்துவம் இல்லாத விழாக்கள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும், முக்கியமான நிகழ்ச்சிகளையும் மிக எளிமையாக நடத்த வேண்டும், புதிய பணியிடங்கள் எதையும், நிதியமைச்சகத்தின் செலவுத்துறையின் ஒப்புதல் இன்றி, உருவாக்க கூடாது. மேலும், ஆலோசகர்கள் நியமனத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்த மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவு, தேசியளவில் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

அதில், அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. யு.பி.எஸ்.சி., ரயில்வே பணியமர்த்தல் வாரியம், ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்(எஸ்.எஸ்.சி) போன்ற அமைப்புகளால் தொடர்ந்து பணியமர்த்தல்கள் நடைபெறும் என தெளிவுபடுத்தியுள்ளது. 

நேற்றைய அறிவிப்பில் புதிய பதவிகளை உருவாக்கக்கூடாது என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்ததே தவிர, புதிதாக யாருக்கும் பணியமர்த்தல்கள் வழங்கப்படாது என்று கூறப்படவில்லை. காலியான இடங்களில் தேவைக்கு ஏற்ப ஆட்களைப் பணியமர்த்தித்தான் ஆகவேண்டும் என்ற சூழலில் அப்பதவிகளுக்கு பணியமர்த்தல்கள் கண்டிப்பாக இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.