எதிர்ப்புக்கு மத்தியில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டமன்றங்களின் தேர்தலும் தனித்தனியாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற பெயரை மத்திய அரசு உச்சரிக்கத் தொடங்கியது முதலே இந்த திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கத்தொடங்கி விட்டன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பரிபோகி மன்னராட்சிக்கு வழிவக்கும் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருசேர குரலெழுப்பின.
ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மத்திய அரசு இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தது. இந்த குழு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகள் கேட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்த உயர்மட்டக்குழு, அந்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என கூறியது. இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்து குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே வேளையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ''ஒடிசாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது போல அசாம் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒன்றாக நடத்தாததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்''என்றார்.