புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி   உத்தரவிட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மதிய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது. இதுக்குறித்து தொடர்ச்சியாக பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே பகிரங்கமாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரை மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

அதேநேரம் சாதகமான சில அம்சங்களை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என உயர்கல்வித் துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார்கள். என்றாலும் கூட பல்வேறு கருத்துகள் எதிர்ப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக் கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களிலும், புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தெந்த பாடப்பிரிவுகள் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது, அதற்கான செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழகங்கள் விரிவாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூஜிசியின் இந்த அறிவிப்பை பல்கலைக்கழகங்கள் ஏற்குமா?? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு நிலவும் நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.