மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு 169 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர். வரும் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

மொத்தம் உள்ள 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அரசு வெற்றிபெற 145 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தங்களிடம் 166 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கருத்தினர். ஆகையால், சனிக்கிழமையான இன்று சட்டப்பேரவை கூடுவதாகவும் பிற்பகலில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை வரலாற்றிலேயே, சபாநாயகரை தேர்வு செய்யாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியதில்லை. இப்போது அவசரமாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அவசியம் என்ன? இப்போது ஏன் பயம் வந்துள்ளது? என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவையில் பேசிய தற்காலிக சபாநாயகர் திலிப் பாட்டில், இந்த கூட்டத்தை நடத்த ஆளுநர் தான் அனுமதி அளித்துள்ளார். விதிகளின்படியே இந்த கூட்டம் நடக்கிறது என விளக்கமளித்தார். பல்வேறு இடையூறுகளுக்கு இடையே நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடங்கிய போது பா.ஜ.க. எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, பெருபான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.