ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசி இருந்த டெய்லர் கண்ணையா லால் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதையடுத்து, பதட்டத்தில் இருக்கும் ஜெய்பூரில் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவை 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
முகம்மது நபிகள் தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளராக இருந்து தற்போது நீக்கப்பட்டு இருக்கும் நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் பாஜக பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவரை ஆதரித்து ஜெய்ப்பூரில் டெய்லராக இருக்கும் கண்ணையா லால் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது கடைக்கு துணி தைப்பதற்காக வருவது போல் இருவர் வந்தனர். ஒருவர் சட்டைக்கு அளவு கொடுப்பது போல் நடித்து கத்தியால கண்ணையா லாலை சரமாரியாக பல முறை குத்தி, தலையை துண்டித்தார். இந்தக் காட்சியை வீடியோவாக உடன் சென்றவர் மற்றொருவர் பதிவு செய்தார். இந்த கொடூர சம்பவம் நடந்த அடுத்த நொடியே அந்த இடத்தில் இருந்து கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்றனர்.
ராஜஸ்தான் போலீசார் விரைந்து செயல்பட்டு கொலை செய்த கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அனைத்துக் கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தனர். கொலையாளிகள் வெளியிட்ட வீடியோவை பயன்படுத்தக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை கொலையாளிகள் இருவரும் சம்பவமா நடந்த அடுத்த சில நொடிகளில் வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ய, வீடியோ வைரலாகிவிட்டது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தீவிரவாதமும், வன்முறையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கண்டித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
விசாரணையில் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் கராச்சியை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன்னி இஸ்லாம் அமைப்பான தாவத் இ இஸ்லாம் என்ற அமைப்பைப் சேர்ந்தவர்கள் கொலையாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
