two days strike on 30th and 31st of may by bank
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும், பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீட்க வலியுறுத்தியும் இம்மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று வங்கி நிர்வாகங்கள் தெரிவிப்பதாக ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வருகிற 30 ஆம் தேதி புதன் கிழமை மற்றும் 31 ஆம் தேதி வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர்.
