தென்னிந்திய சினிமாவைக் கடந்து இந்தி சினிமாவிலும் கொடி கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்துள்ளார். தொடக்கத்தில் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என தகவல்கள் வந்த நிலையில், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனைக்கு பிறகு பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாகவும் அவரது ரத்தத்தில் மது கலந்திருந்ததாகவும் தடயவியல் அறிக்கை தெரிவிக்கிறது. இதையடுத்து ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் உறவினர்கள், தங்கியிருந்த விடுதி ஊழியர்கள் என அனைவரிடமும் துபாய் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. போனி கபூர் ஸ்ரீதேவியை காதல் வலையில் சிக்கவைத்து திருமணம் செய்துள்ளார்.

இதை போனி கபூரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் உச்சி மாநாட்டில் ஸ்ரீதேவி கலந்துகொண்டார். அந்த விழாவில் கலந்துகொண்ட போனி கபூரிடம் ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது காதல் கதையை தெரிவித்தார் போனி. 1970களில் ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப்படங்களை பார்த்தபோதே அவர் மீது இனம்புரியாத கவர்ச்சி ஏற்பட்டது. அவரை என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அப்போது ரிஷி கபூர் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததால், அந்த படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க கேட்பதற்காக சென்னை சென்றேன். ஆனால் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அதன்பிறகு ஷேகர் இயக்கத்தில் மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவியை நடிக்கவைக்க திட்டமிட்டேன். அந்த சமயத்தில் 8 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஆனால், என் படத்தில் நடிக்க 10 லட்சம் சம்பளம் தருமாறு ஸ்ரீதேவியின் தாயார் கேட்டார். நான் 11 லட்சம் வழங்கினேன். அதனால் ஸ்ரீதேவியின் தாயாருக்கு என்னை பிடித்துவிட்டது. 

இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவிக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்து அவர் மனதிலும் இடம் பிடிக்க தொடங்கினேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதில் இடம்பிடித்தேன். நான் அவரிடம் உண்மையாக உள்ளதை உணர்ந்த ஸ்ரீதேவி, இப்போது என் மனைவியாக இருக்கிறார் என போனி கபூர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஸ்ரீதேவியை திட்டமிட்டே தனது காதல் வலையில் சிக்கவைத்து திருமணம் செய்துள்ளார் போனி கபூர்.