திரிபுராவில் பிரதமர் மோடி இருந்த மேடையில் மாநில அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரின் இடுப்பை பிடித்து அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கர்ஜி-பிலோனியா இடையேயான ரயில் தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கான கல்வெட்டை அவர் திறந்து வைத்தபோது திரிபுரா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதலமைச்சர் பிப்லப் தேவ் ஆகியோர் உடனிருந்தனர். 

பிரதமருக்கு நேர் எதிர்வரிசையில் திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ், சமூகநலத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் அமைச்சரும், பழங்குடியின இளம் தலைவருமான சாந்தனா சக்மா உள்ளிட்டோர் நின்றிருந்தனர். அப்போது பிரதமர் மோடி இருக்கும் போதே அநாகரிகமான முறையில் மனோஜ் காந்தி தேவ், பெண் அமைச்சர் இடுப்பில் கை வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

இந்நிலையில் மிகவும் கீழ்தரமாக நடந்துக்கொண்ட மனோஜ் காந்தி தேவ்-ஐ திரிபுரா அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பெண் அமைச்சரே புகாரே தெரிவிக்காத நிலையில், இடதுசாரிகள் தவறான இதுபோல விஷயத்தை பரப்பி வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளனர். அதேசமயம் மனோஜ் காந்தி இது குறித்து இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.