திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பிரத்யாட் தேப் பர்மன், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் கிரிட் பிராத்யாட் தேவ் பர்மன். இவருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கட்சி தலைவர் சோனியா காந்தியை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

 

இந்நிலையில், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பிராத்யாட் தேவ் பர்மன் இன்று தனது சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். ஊழல் செய்தவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதாகவும், கோஷ்டி மோதல் உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். “தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். நீண்ட நேரம் நிம்மதியாக உணர்ந்த பிறகு இன்று காலையில் விழித்தேன். குற்றவாளிகள் மற்றும் பொய்யர்களின் பேச்சைக் கேட்காமல் நான் இந்த நாளைத் தொடங்குகிறேன்.

நம்முடன் இருப்பவர்கள் முதுகில் குத்திவிடுவார்களோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. கோஷ்டி சண்டை போட வேண்டியதில்லை, ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பேச வேண்டியதில்லை.  ஊழல் செய்தவர்களை கட்சியின் உயர் பதவிகளில் வைப்பது தொடர்பாக மேலிடத்தின் உத்தரவை கேட்க வேண்டியதில்லை.

தவறான நபர்கள் கட்சியில் உயர் பதவிகளை பெறுவதை தடுக்க முயற்சி செய்தேன். அது தோல்வி அடைந்து விட்டது. ஆரம்பத்தில் இருந்தே தனி நபராக போராடினால் எப்படி நான் வெற்றி பெறுவேன்?  இனி தெளிவான மற்றும் நேர்மையான மனதுடன் எனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்னால் பங்களிக்க முடியும்” என பிராத்யாட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.