மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், கொல்கத்தாவின் முன்னாள் மேயருமான சோவன் சாட்டர்ஜி நேற்று பாஜகவில் ஐக்கியமானார். இதனையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் சோவன் சாட்டர்ஜி. கட்சி தலைமையுடன் சாட்டர்ஜிக்கு கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு, தான் வகித்த மேயர் பதவியை ராஜினாமா செய்தார். சாட்டர்ஜியின் இந்த முடிவு கட்சி மேலிடத்திற்கு சற்று அதிர்ச்சியை தந்தது. திரிணாமுல் காங்கிரஸில் அவரை மீண்டும் இணைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

 

மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை தேர்தலில், ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத விதமாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முகுல்ராய் முன்னிலையில், சாட்டர்ஜி பா.ஜ.க நேற்று இணைந்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க. இணைந்துள்ளனர். தற்போது சோவன் சாட்டர்ஜியும் பாஜகவில் இணைந்துள்ளது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.