தட்கல் டிக்கெட் கூட ரீபண்ட் வாங்கலாம் என்ற தகவல் பெரும்பாலான ரயில் பயணிகளுக்கு தெரியாது. தட்கல் முன்பதிவு செய்த ரயில் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் அல்லது பயணப்பாதை மாற்றப்பட்டால் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்து ரீபண்ட் வாங்கும் உரிமை பயணிகளுக்கு உண்டு.

பயணி ஒருவர் தான் ஏற வேண்டிய ரயில் நிலையத்தில் ஏற தவறி விட்டால், அந்த பயணியின் இருக்கையை வேறு நபருக்கு உடனடியாக பயணச்சீட்டு பரிசோதகரால் கொடுக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது ரயில் 2 நிறுத்தங்களை தாண்டிய பிறகே வராத பயணியின் இருக்கையை வேறொரு நபருக்கு ஒதுக்க முடியும். ஆக, ஒருவர் தான் ஏற வேண்டிய ரயில் நிலையத்தில் ஏற தவறினால் அடுத்த 2 ரயில் நிறுத்தங்களுக்குள் ரயில் ஏறி கொள்ள பயணிக்கு ரயில்வே அனுமதி அளிக்கிறது.

ரயில்வே சட்டத்தின்படி, ரயில்களில் மிடில் பெர்த்தை தூங்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்தை பயணி பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் மிடில் பெர்த் வசதியை பயன்படுத்தினால் மற்ற பயணிகளுக்கு அது இடையூறாக இருக்கும் என்பதே இதற்கு காரணம்.