Asianet News TamilAsianet News Tamil

ரெயில் பயணிகள் கட்டணம் இனி அடிக்கடி உயரும்… லாபத்தில் இயக்க பிரதமர் மோடியின் அடுத்த திட்டம்

train fare
Author
First Published Dec 28, 2016, 7:18 AM IST


ரெயில் பயணிகள் கட்டணம் இனி அடிக்கடி உயரும்…

லாபத்தில் இயக்க பிரதமர் மோடியின் அடுத்த திட்டம்

கடும் நஷ்டத்திலும், திட்டங்களை நிறைவேற்ற பணமில்லாமல் தவிக்கும் ரெயில்வே துறையை லாபத்தில் இயக்க நாட்டில் நிலவும்  பணவீக்கத்துக்கு ஏற்றார்போல், ரெயில் பயணிகள் கட்டணத்தை மாற்றி அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதாவது, நாட்டின் சில்லரை பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை அறிவிப்பு வெளியிடுகிறது. அப்போதுதான் குறுகியகாலக் கடனுக்கான வட்டிவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.  அப்போது பணவீக்கம் குறைந்து இருந்தால், வட்டிவிகிதம் குறைக்கப்படுவதும், பணவீக்கம் அதிகரித்து இருந்தால், வட்டி விகிதம் உயர்த்தப்படுவது அல்லது உயர்த்தாமல் விட்டுவிடுவது இயல்பாகும்.

இதுபோலவே ரெயில்வே துறையிலும், பணவீக்கத்துக்கு ஏற்றார்போல், பயணிகள் ரெயில் கட்டணத்தை மாற்றி அமைத்து, காலாண்டுக்கு ஒரு முறையோ, அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்தால், டிக்கெட் விலையை அதிகரித்தும், பணவீக்கம் குறைந்தால், டிக்கெட் விலையை குறைக்கவும் முடியும். இதன்மூலம் எதிர்காலத்தில் ரெயில்வேதுறையின் வருவாய் படிப்படியாக அதிகரிக்கும்.

இது குறித்து ரெயில்வே துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்வே துறையை இழப்பில் இருந்து மீட்க எடுக்கப்படும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று. சில்லரை பணவீக்கத்தோடு, பயணிகள் ரெயில் கட்டணத்தை இணைத்து மாற்றி அமைப்பதன் மூலம், ரெயில்வே துறை இழப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

நாடுமுழுவதும் ரெயிலில் நாள் ஒன்றுக்கு 2.3 கோடி பேர் பயணிக்கிறார்கள். ஆனால், வருவாய் என்றால் மிகமிகக் குறைவு, நடப்பு நிதியாண்டில் சலுகைகள், மானியங்கள் கொடுத்த வகையில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதற்கிடையே 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கூடுதலாக ரூ.32 ஆயிரம் கோடி ேதவைப்படுகிறது . 

இந்த செலவை ஈடுகட்டவும், புதிய திட்டங்களை நிறைவேற்றவும் நிதி திரட்டுவது அவசியம். நடப்பு நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளில் ,நிர்ணயிக்கப்பட்டு இருந்த வருவாய் இலக்குகளையும் ரெயில்வேதுறையால் எட்டமுடியவில்லை. அதேசமயம்,நடுத்தர மக்கள் பயணம்செய்யும் சாதாரண பெட்டிகளில் கட்டணம் உயர்த்தாத நிலையில், உயர்வகுப்பு கட்டணங்களையும் ஓரளவுக்குதான் உயர்த்தமுடியும். 

இந்தநிலையில், ரெயில்பயணிகள் கட்டணத்தை பணவீக்கத்தோடு இணைத்து அவ்வப்போது மாற்றம் செய்யும் போது, இழப்பில் இருந்து காக்க முடியும், காலப்போக்கில் ரெயில்வே துறையை லாபத்தில் இயக்க முடியும். இதற்காக குறைந்தபட்சம், 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணத்தையும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரெயில்வே துறைக்கு ஒரு ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றால், அதில் 66 காசு, சரக்கு போக்குவரத்தில் இருந்தும்,28 காசு பயணிகள் கட்டணத்தில் இருந்தும் கிடைக்கிறது. அப்படி இருக்கையில் சரக்கு கட்டணத்தை மாற்றி அமைப்பது என்பது இப்போது கிடைக்கும் வருவாயையும் பாதிக்கும. ஆதலால்,பயணிகள் கட்டணத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 ரெயி்்ல் பயணிகள் கட்டணத்தை பணவீக்கத்துக்கு ஏற்றார்போல் மாற்றுவது குறித்து கடந்த மாதம், பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்த திட்டம் செய்லபடுத்தும் முனைப்பில் ரெயில்வே துறை இருக்கிறது.

சர்வதேச அளவில் ஜப்பான் ரெயில்வே தனது ஒரு பயணியிடம் இருந்து 9.4 ரூபாய் வருவாய் ஈட்டும் போது, இந்தியன் ரெயில்வே ஒரு பயணியிடம் இருந்து ஒரு ரூபாய் மட்டுமே வருவாய் பெறுகிறது. இதுவே ரஷியாவில் ரூ.6.2, ஜெர்மன் ரூ.6.2 வருவாய் பெறுகின்றன.

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios