உத்தரப்பிரதேசத்தில் பூரி – ஹரித்வார் ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 23 பேர் உயிரிழந்தார்கள். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்கு அருகே கடாவுளி என்ற பகுதி உள்ளது. இதன் வழியே பூரி – ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ஒடிசாவின் பூரியில் இருந்து உத்தரகாண்டின் ஹரித்வாரை நோக்சி சென்ற அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது. இதையடுத்து, முன் வரிசையில் இருந்த 6 பெட்டிகள் ஒன்றின்பின் ஒன்று மோதி பக்கவாட்டில் புரண்டன.

நேற்ற மாலை 6.45-க்கு இந்த விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். லக்னோவில் இருந்து தீவிரவாத எதிர்ப்பு படையினரும் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்த 150- க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.