தமிழ் மாநிலத்தின் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் புஷ்பா. 55 வயதான இவர் கேரள மாநிலம், கொச்சி மரைன் டிரைவ் அருகே உள்ள லிங்க் ஹொரைஸனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வழக்கறிஞர் இம்தியாஸ் அகமது என்பவரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவர் வேலைக்குச் சேர்ந்தது நவம்பர் 28ம் தேதி. சில நாட்கள் மட்டுமே அந்த வீட்டில் அவர் பணிபுரிந்த நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு அபார்ட்மென்ட் உரிமையாளரிடமிருந்து போன் வந்துள்ளது. போனில் பேசியவர்கள், ``புஷ்பா பால்கனியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று மட்டும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

உடனடியாக கேரளா விரைந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் வேலை பார்த்து வந்த வீட்டில்  சித்ரவதைகளை அனுபவித்து வந்த புஷ்பா அதில் இருந்து தப்பிப்பதற்காக கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து இரண்டு சேலைகளை கட்டி இறங்கும் போது கீழே தவறி விழுந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் அவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் சிகிச்சை பலனின்றி  மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த புஷ்பாவின் கணவருக்கு கண் பார்வை இல்லை. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இதற்கிடையே, தற்போது புஷ்பாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக அவரின் கணவர் உட்பட குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

கேரள மகளிர் ஆணைய அதிகாரிகள் புஷ்பா இறந்த வீட்டினை  பார்வையிட்டனர். அவர்களும், “உண்மையை அறிய இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு மர்மமானது. இதற்கு முன்பே, இந்த பிளாட் உரிமையாளர் 14 வயது குழந்தையை வேலைக்கு அமர்த்தி, சிறுமியிடம் கொடூரமாக நடந்து கொண்டார். ஆனால் காவல்துறை அவருக்கு எதிராக அற்பமான பிரிவுகளில் மட்டுமே வழக்கு சுமத்தியது" என்று கூறியுள்ளனர்.