வருமானவரி செலுத்துபவர்கள், தங்களின் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று(ஆகஸ்ட் 31ந்தேதி) கடைசி நாள், காலக்கெடு நீட்டிக்கப்படாது  என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு இணைக்காமல் இருந்தால்,வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் ரிட்டன்கள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது, ரூ.5 ஆயிரம் அபராதம், வழக்கு பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அறிவிப்பு

நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வருமானவரி செலுத்துபவர்கள் தங்களின் பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் எனத் ெதரிவித்தார். இதற்கான முதல்கட்ட காலக்கெடு ஜூலை 1-ந் தேதியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது.

காலக்கெடு நீட்டிப்பு

இதற்கிடையே  கடந்த 5-ந்தேதி 2016-17ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன், ‘பான்கார்டை’ இணைத்திருக்க வேண்டும் என வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்காமல் இருந்தாலும், இம்மாதம் இறுதிக்குள் அதாவது 31-ந்தேதிக்குள் இணைக்க காலக்கெடு விதிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்காதவர்களின் வருமான வரி ரிட்டன் பரிசீலணைக்கு எடுக்கப்படாது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு இன்றுடன்(31-ந்தேதி) முடிகிறது. அவ்வாறு இணைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிட்டால்

அதன்படி, ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் பான்கார்டை, ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 2016-17ம் ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்து இருந்தாலும், அது பரிசீலனைக்கு எடுக்கப்படாது. அது செல்லாததாக கருதப்படும்.

நோட்டீஸ், வழக்கு

வருமானவரிச் சட்டம் பிரிவு 142(1)ன் கீழ் பான் கார்டு, ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மீது வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்படும்.

அபராதம்

காலதாமதாக ரிட்டன் தாக்கல் செய்த காரணத்துக்காக வருமானவரித் துறை அதிகாரி அபராதமாக அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரை விதிக்கலாம்.

வருமானவரி செலுத்துபவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, தொழில் இழப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டி எந்த நிவாரணமும் பெற முடியாது. இது இழப்பீட்டுத் தொகையிலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.