இது எங்க குடும்பத்துக்கு போதாத காலம்! பிரியங்கா காந்தி கவலை
தங்கள் குடும்பத்திற்கு தற்போது நேரம் சரியில்லாத காரணத்தால்தான் போராட்டங்களைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எதிர்கொண்டதைப் போன்ற சூழலை இப்போது தங்கள் குடும்பம் சந்தித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலளார் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் புதன்கிழமை சிக்கமகளூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, இந்திரா காந்திக்கு நடந்ததைப் போன்ற ஒரு பொய் வழக்கில் தனது சகோதரரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதில் இருந்து உண்மைக்காக கடவுள் மற்றும் மக்களின் ஆசீர்வாதத்துடன் போராடி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். சிருங்கேரி மடத்துக்குச் சென்றது பற்றி நினைவுகூர்ந்த அவர், தன் தந்தை ராஜீவ் காந்தியும் பாட்டி இந்திரா காந்தியும் அங்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
"சிருங்கேரியில் உள்ள சாரதா தேவிக்கு பிரார்த்தனை செய்துவிட்டு வருகிறேன். அங்கு நான் சங்கராச்சாரியாரை (தற்போதைய மடாதிபதி) சந்தித்தேன். அவர் இந்திரா காந்தி இங்கே தேர்தலில் போட்டியிட்டாரா இல்லையா எனக் கேட்டார். நான், ஆம், அவர் சிக்கமகளூருவில் போட்டியிட்டார் என்றேன். அவர் எனக்கும் என் சகோதரருக்கும் ஆசிர்வாதம் வழங்கினார்" எனத் தெரிவித்தார்.
“இன்று என் குடும்பத்துக்குப் போராட்டக் காலம். 1978-ல் இந்திராஜி இந்த மைதானத்துக்கு வந்தபோதும் அவருக்கு போராட்டக் காலம்தான். அன்றும் இப்படித்தான் மழை பெய்தது. இது கடவுளின் ஆசீர்வாதம் என்று நம்புகிறேன். மழை ஒரு நல்ல சகுனம். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது”என அவர் கூறினார்.
1975 முதல் 1977 வரை எமர்ஜென்சி காலத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் ராஜ் நரேனால் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 1978 இல், சிக்கமகளூரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட முடிவு செய்தார்.
இதனால் அப்போது அவரது விசுவாசிகளில் ஒருவராகக் கருதப்பட்ட டி.பி. சந்திரே கவுடா (இவர் பின்னர் பிஜேபியில் இணைந்தார்) அவருக்காக பதவி விலகினார். அப்போது, முன்னாள் காங்கிரஸ் முதல்வரும் ஜனதா கட்சி வேட்பாளருமான வீரேந்திர பாட்டீலை 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்திராஜி தனது கடினமான போராட்டக் காலத்தை எதிர்கொண்டபோது, சிக்கமகளூரு மக்கள் அவருக்கு ஆதரவாக நின்றார்கள் என்ற பிரியங்கா, தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் சார்பாக சிக்கமகளூரு மக்களுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.