To practice what he preaches Kohli drops Pepsi fairness products

புது தில்லி :

எத்தனை கோடி கொடுத்தாலும், நான் குளிர்பான விளம்பரம், அழகு சாதனப் பொருள்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி! நான் என்ன செய்கிறேனோ அதைத்தான் என்னால் வெளியில் விளம்பரப் படுத்த முடியும். நான் குளிர்பானம் குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சனிக்கிழமை இன்று செய்தி நிறுவனத்திடம் பேசிய கோலி உறுதியாகக் கூறியுள்ளார்.

விராட் கோலி, விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.4.5 முதல் 5 கோடி சம்பளமாகப் பெறுகிறார். பெப்சி நிறுவனம் கோலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளது எனத் தெரிவிக்கவில்லை. ஆனால், பியூமா விளையாட்டுப் பொருள் நிறுவனம், எம்ஆர்எப் டயர், ஜெர்மனியின் சொகுசுக் காரான ஆடி கார் உள்ளிட்ட 17 நிறுவனங்களில் ரூ.100 கோடிக்கு அதிகமான தொகைக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் விராட் கோலி! அனைத்தையும் சமூகத்துடன் தொடர்புடைய வகையில் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளாராம்! 

விராட் கோலி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பெப்சி குளிர்பான நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். விளம்பர ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் பெப்சி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோலி மறுத்துள்ளார். தான் இனி குளிர்பான விளம்பரங்களிலோ, அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களிலோ நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள கோலி, தனது பெயரில் வெளியாகும் விளம்பரப் பொருட்களை மக்கள் நம்புவதால், மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அளிக்கும் வகையில் நம்பிக்கைக்குரிய வகையில் தான் நடந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு சமூகப் பொறுப்பு உள்ளதாகவும், அதனால் அதற்கு ஏற்ற வகையில், பொருட்களை கவனமாகத் தேர்வு செய்து நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ள கோலி, தற்போது உலக ஊட்டச்சத்து நிறுவனமான ஹெர்பா லைஃப் விளம்பர தூதராக உள்ளார்.

இதனிடையே, ஹெர்பா லைஃப்க்கு விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ள கோலி, தனது இமேஜ் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், அவர் ஜங்க் ஃபுட், போன்ற உடலுக்குத் தீங்கிழைக்கும் உணவுப்பொருள்கள் குறித்த விளம்பரத்திலும் நடிக்கக் கூடாதுதான் என்று கூறியுள்ளார் ஒரு ஆலோசகர்.