திருப்பதிக்கு போறீங்களா?... மறக்காமல் ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க…
திருமலை திருப்பதி கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு பிற்பித்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தலரி ரவி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட், மற்றும் லட்டு பெறுகிறவர்கள், கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். தற்போது பக்தர்கள் திருமலையை அடைந்தவுடன் சிறப்பு தரிசனம் முடிந்தவுடன், அடையாள அட்டையின்றி இலவசமாக லட்டுதரப்பட்டு வருகிறது. அது போக மானிய விலையிலும் லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
சிலர் இந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இலவசமாக லட்டுகளையும் பெற்றுக்கொண்டு, மானிய விலையில்வழங்கப்படும் லட்டுகளையும் பெற்று கள்ளத்தனமாக விற்பனை செய்கிறார்கள். அதைத்தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அதேசமயம், ஆதார் கார்டு கொண்டு வருவதற்கு மறந்துவிட்ட பக்தர்கள் மத்திய,மாநில அரசுகள் அளித்த அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும். அதேசமயம், அடையாள அட்டை இல்லாதவர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள், லட்டுவும் பெற முடியாது.” என்று தெரிவித்தார்.
