திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆவதை தடுக்கும் வகையில் 3 வகையாக இருந்த விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான விஐபி தரிசனம் இனி பின்பற்றப்படுவம் என திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம் என பல்வேறு வகையான தரிசன முறைகள் நடைமுறையில் உள்ளன. ஒரே கட்டணத்தில் மூன்று வகையான டிக்கெட்டுகளை வழங்கி பக்தர்களை பிரித்துப் பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பொதுநல வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கடந்த மாதம் தேவஸ்தான நிர்வாகம் விஐபி தரிசன முறையை ரத்து செய்தது.

 

இந்நிலையில், தற்போது திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள ஸ்ரீவாணி திட்டத்திற்கு 10,000 ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களுடன் கூடிய விஐபி தரிசனமும் பெரிய அளவில் நன்கொடை செய்யும் நன்கொடையாளர்களுக்கு பிரதான பூஜைகள் ஆன தோமாலை, வஸ்திர அலங்காரம், அபிஷேக தரிசனமும் அளிக்க தேவஸ்தான ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். 

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு செயற்குழு தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பாரெட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழகத்துக்கு தேவையான நீரை கொடுக்க ஆந்திர அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் போதிய அளவு மழை பொழிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

 

மேலும், திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மூன்று வகையாகப் பிரித்து இருந்த விஐபி தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு ஒரே வகையிலான விஐபி தரிசன முறை பின்பற்றப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.