திருப்பதியில் இன்று இரவு கருட சேவை.. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு..
திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு நடைபெறுகிறது. இதனால் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ஏழுமலையான் வீதியுலா நடைபெற்றது.
நேற்றிரவு சர்வ பூபால வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு, கோவிந்தா கோவிந்தா என்று பக்திகோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்
கருடசேவையை முன்னிட்டு திருப்பதி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா மற்றும் பொதுமக்கள் சார்பில் 5 டன் சாமந்தி மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை இன்றிரவு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும். கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு 3 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி