திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் புகழ்பெற்ற ஸ்ரீகோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. இங்கே உத்ஸவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகோவிந்தராஜ சுவாமிக்கு அணிவிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரிவந்துள்ளது. நேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்ககப்பட்டது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். சனிக்கிழமை காலை முதல் கோவிலில் பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து போலீசாரும் , தேவஸ்தான பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் தேவஸ்தானத்தில் மட்டுமல்லாது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.