லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து, விமான மற்றும் ரயில்  நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பதி கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் திருப்பதி கோவில் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.