திரிபுரா மாநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தை மூடியிருந்ததைப் பார்த்த 9 வயது சிறுமி ஒருவர், தனது சட்டையைக் கழற்றி வேகமாக வந்த ரயில் முன்பாக அசைத்து  ரயிலை நிறுத்தினார். இந்த சிறுமியின் செயலால் 2 ஆயிரம் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அவரின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தற்போது அந்த மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் பல இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுமதி தனது தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுடன் தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது

.

ஆனால் அந்த இடத்தில் கடும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் மண்ணால் மூடிக் கிடந்தது. அப்போது அதைப் பார்த்த சிறுமியும் அவரின் தந்தையும்  உடனடியாக அவ்வழியாக வந்த ரயில் முன்பு நின்று தனது சட்டையைக் கழற்றி அசைத்துக் காட்டியுள்ளனர். அதைப்பார்த்த ரயில் என்ஜின் டிரைவர்  உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதையடுத்து பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த ரயில் பயணம் செய்த 2000  பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து அந்த  சிறுமியையும்  அவளது தந்தையையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  சுதிப் ராய் பர்மன் அவர்கள் இருவரையும் அழைத்து பாராட்டி விருந்து வைத்தார்,

மேலும் அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்க பரிந்துரைக்கவும்  திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.