Asianet News TamilAsianet News Tamil

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இனி, பயணிகள் சார்ட் இருக்காது!

time chart not applied at express train
time chart not applied at express train
Author
First Published Sep 19, 2017, 5:26 PM IST


சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கை சென்னை சென்டிரல் உட்பட இதர 6 முக்கிய ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

6 ெரயில் நிலையங்கள்

புது தில்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், மும்பை சத்ரபதி ஷிவாஜி டெர்மினஸ், ஹௌரா, சீல்தா மற்றும் சென்னை சென்டிரல் என 6 ரயில் நிலையங்களில், பயணிகளின் சார்ட் ஒட்டும் பணியை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

பயணிகள் சார்ட்

டிக்கெட் கடைசி நிமிடத்தில் உறுதி செய்யப்பட்டவர்களுக்கும், இருக்கையில் இருந்து படுக்கை வசதிக்கு விண்ணப்பித்திருந்த பயணிகளுக்கும், கடைசி நேரத்தில் ரயில் ஏற வருவோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது இந்த பயணிகள் சார்ட்.

ரூ.30 லட்சம் செலவு

இது குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதால் மட்டும் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் செலவு குறையும். அதோடு, அதற்குத் தேவையான காகிதங்களின் அவசியமும் குறைகிறது. 

ஏற்கனவே பெங்களூர் மற்றும் யஷ்வந்த்புர் ரயில் நிலையங்களில், பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. அங்கு கிடைத்த அறிவுறுத்தலின்படியே, தெற்கு ரயில்வே, மேலும் 6 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணியை நிறுத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது.

பரிசோதனை

6 ரயில் நிலையங்களிலும் இந்த நடைமுறை முதல் 3 மாதங்களுக்கு பரிசோதனை முறையில் செய்யப்படும். அதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி, அவுட்சோர்ஸிங் முறையில் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு ரயில்வே ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் வழங்கி வருகிறது. அதோடு, பயணிகள் சார்ட்டை ரயில்வே பிரிண்ட் எடுத்து சுமார் 4000 பக்கங்களைக் கொண்ட காகிதங்களை ஒப்பந்ததாரர்களிடம் கொடுக்கிறது. எனவே, பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டால் ரூ.30 லட்சம் செலவு மட்டுமல்லாமல் காகிதங்களும் மிச்சமாகும் என்று கூறுகிறார்.

நுழைவாயில்

ரயிலில் அந்தந்த பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதற்கு மாற்றாக, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலைய நுழைவாயிலில் ஒட்டுமொத்த பயணிகள் சார்ட்டும் ஒட்டப்படும். அதன் மூலம் காத்திருப்போர் பட்டிலியல் இருப்பவர்களும், ஆர்ஏசி பயணிகளும் தங்களது டிக்கெட்டின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஏன் நிறுத்தம்?

இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்தில் பயணிகள் பெரும்பாலும் தங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன், எஸ்.எம்.எஸ்., இணையதளம் மூலமும், உதவி எண்கள் மூலமும் தங்களின் டிக்கெட் நிலவரத்தை அறிந்து கொள்கிறார்கள். ரிசர்வேஷன் பயணிகள் சார்ட்டை அதிகமாக பார்ப்பதில்லை. அதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios