உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால்  தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒரே நாளில் 839 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 90,584 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,81,446 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11, 08,087 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தீயாய் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன் படி நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிரதமர் மோடி தடுப்பூசி திருவிழா குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். 

1. தடுப்பூசி போடும் ஒவ்வொருவரும் படிக்காத அல்லது குறைவாக படித்தவர்களுக்கு தடுப்பூசி போட உதவுங்கள்.

2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க உதவுங்கள்.

3. ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணியுங்கள்; அது மற்றவரின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

4. கொரோனா தொற்று பதிவான பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளை வகைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.