இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன: புள்ளிவிவரங்களை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு
மைசூரில் நடைபெற்ற புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டார்.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக உயர்ந்துள்ளதாவும் இதற்குக் காரணமான புலிகள் பாதுகாப்புத் திட்டம் உலகமே எண்ணிப் பெருமை கொள்ளத்தக்கது எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
1973ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கி இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் பூர்த்தி ஆவதை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூருவில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்டர்நேஷனல் பிக் கேட் அல்லயன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்து, புலிகள் கணக்கெடுப்பு குறித்த அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நாம் அனைவரும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 வருடங்கள் என்ற மிக முக்கியமான மைல்கல்லுக்கு சாட்சியாக இருக்கிறோம். இந்தியா புலியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கொடுத்துள்ளது" என்றார். உலக நிலப்பரப்பில் மொத்தம் 2.4 சதவீதமாக உள்ள புலிகள் வாழிடப் பகுதியில் இந்தியாவில் பங்களிப்பு மட்டும் சுமார் 8 சதவீதம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான மோதலை நாங்கள் நம்பவில்லை, ஆனால் அவற்றின் சம முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார். "இயற்கையைப் பாதுகாப்பது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். புராஜெக்ட் டைகரின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நேரத்தில், உலக புலிகள் எண்ணிக்கையில் 75 சதவீதம் இந்தியாவில் உள்ளது" என பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.