Asianet News TamilAsianet News Tamil

உயிரியல் படிக்கவில்லை என்றாலும் மருத்துவராகலாம்: புதிய வழிகாட்டுதல்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதலின்படி, உயிரியல் படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில்  சேர முடியும்

Those who have not studied biology in plus two can become doctors smp
Author
First Published Nov 23, 2023, 4:13 PM IST | Last Updated Nov 23, 2023, 4:13 PM IST

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாகக் கொண்டு பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவராக முடியும். தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உயிரியல்/உயிர்தொழில்நுட்ப பாடத்தை கூடுதலாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகும் ஆங்கிலத்துடன் தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கூடுதலாக படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவப் படிப்புகளைத் படிக்க விருப்பப்பட்டால், அதற்கு அந்த மாணவர்/மாணவி தகுதியுடையவர் என்று தேசிய மருத்துவ ஆணையம் சட்டப்பூர்வ தகுதிச் சான்றிதழும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணி: தொழிலாளர்களை மீட்க 15 மணி நேரமாகும்!

இதற்கு முன்பு ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றால், பிளஸ்1, பிளஸ்2 என இரண்டு ஆண்டுகளுக்கு ஆங்கிலத்துடன் கூடிய இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் ஆகிய படிப்பை படிக்க வேண்டும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு உயிரியல்/பயோடெக்னாலஜி அல்லது வேறு எந்தத் தேவையான பாடத்தையும் கூடுதல் பாடமாக முடிக்க முடியாது என்ற பழைய விதியை தேசிய மருத்துவ ஆணையம் தற்போது மாற்றியுள்ளது.

அதன்படி, பிளஸ்1, பிளஸ்2-வில் உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் பாடத்தை படிக்காவிட்டாலும், கூடுதல் பாடமாக அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, அப்பாடங்களை கூடுதலாக படித்து தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று ஆலோசித்த தேசிய மருத்துவ ஆணையம், நீட் தேர்வு எழுதுவதற்கான விதிகளை இதுபோன்று தளர்த்தியுள்ளது. அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான தகுதிச் சான்றிதழை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios